புதன், 15 ஆகஸ்ட், 2012

நாய்கள் ஜாக்கிரதை!


 நாய்கள் ஜாக்கிரதை!
Inbox
x

தி மனிதன் குகையில் வாழ்ந்த காலத்தில் இருந்தே மனிதனோடு நேசம் கொண்டவையாக இருப்பவை நாய்கள். செல்லப் பிராணியாக, காவல்காரனாக, வேட்டைக்கு உறுதுணையாக, துப்பறியும் வேலை பார்க்கும் திறமை உடையதாக, பார்வையற்றோரை வழி நடத்திச் செல்வதாக... இப்படிப் பல விதங்களிலும் மனிதனோடு நெருங்கிய பந்தத்தில் இருக்கின்றன நாய்கள். ஆனால், 'ரேபிஸ்’ (Rabies) என்னும் வெறி நோய் நாய்களைத் தாக்கினால், அவற்றால் கடிபட்டு அலட்சியப்படுத்துவோருக்கு மரணத்தைத் தவிர வேறு வழி இல்லை. அதிலும் பாதிக்கப்பட்டவரை மிகுந்த வேதனைக்கு ஆட்படுத்திய பிறகே மரணம் சம்பவிக்கும். நாய்க்கடியை எப்படிச் சமாளிப்பது?
 
கோவை பொது மருத்துவர் ஆர்.ஸ்ரீனிவாசன் முதல் உதவி வழிகளைச் சொல்கிறார்:
'' 'ரேபிஸ்’ என்ற கிரேக்க வார்த்தைக்குப் 'பைத்தியம்’ என்று அர்த்தம். இது ஒருவகை வைரஸால் ஏற்படுவது. மூளையை வீங்கச் செய்யும். விலங்குகளிடம் இருந்து மனிதனுக்குப் பரவக் கூடியது. நாய் கடிக்கும்போது அதன் உமிழ்நீரில் உள்ள வைரஸ், கடிபட்ட காயத்தின் மூலம் மனிதனுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது. வெறி நாய் கடித்த பிறகு கவனிக்காமல் விட்டுவிட்டால் உணவை விழுங்குவதில் சிரமம், தண்ணீரைக் கண்டால் பயந்து அலறுவது, அதனால் தாகத்துடனேயே தவிப்பது போன்றவை நிகழும். இதனால்தான் இந்த நோய்க்கு 'ஹைட்ரோபோபியா’ (Hydrophobia) என்று பெயர்.
 
நாய்க்கடியில் நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. ரேபிஸ் நோய் உள்ள நாய் ஒருவரைக் கடித்துவிட்டால் சில மாதங்கள் வரை கடிபட்டவருக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது. காரணம்... கடிபட்ட இடத்தில் இருந்து வைரஸானது மூளைக்குச் செல்லச் சிறிது காலம் பிடிக்கும். ஆனால், நிச்சயமாக அது மூளையைச் சென்று அடையும். அதன் பின்னர்தான் நோய் தன் வேலையைக் காட்டும். நோய்க்கான அறிகுறிகள் தென்படும்போது சிகிச்சை அளித்துக் குணமாக்கும் நிலையை நோயாளி கடந்துவிட்டிருப்பார். எனவே, கடித்தது வீட்டில் வளர்க்கும் நாயாக இருந்தாலும் தெருநாயாக இருந்தாலும் அலட்சியமாக இருக்கக் கூடாது.
 
நாய் கடித்த இடத்தை நன்கு சோப் போட்டுக் கழுவ வேண்டும். ஆன்டிசெப்டிக் திரவங்கள் இருந்தால் அவற்றாலும் காயத்தைக் கழுவலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் காயத்தின் மீது மஞ்சள், சுண்ணாம்பு அல்லது பச்சிலைகள் போன்றவற்றை அரைத்துப் பூசக் கூடாது. கடிவாயில் கத்தியால் கீறி ரத்தத்தை வெளியேற்றுவதும் தவறு. உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். டெட்டனஸ் என்ற ஊசியுடன் ரேபிஸ் வராமல் இருப்பதற்காக உள்ள சிறப்பு ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் நாய் கடித்தவுடன் ரேபிஸ் வந்துவிடாமல் இருக்கத் தொப்புளைச் சுற்றி 14 ஊசி போடுவார்கள். இப்போது ஐந்து ஊசி போதுமானது. அதுவும் உடலில் எங்கு வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். துரதிர்ஷ்டவசமாக மறுபடியும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நாய் கடித்துவிட்டால் இரண்டு ஊசி போதும்' என்று தைரியம் கொடுத்த டாக்டரிடம், ''வேறு மிருகங்களின் மூலமும் மனிதர்களுக்கு ரேபிஸ் வருமா?'' எனக் கேட்டோம்.
 
''97 சதவிகிதம் நாய்கள் மூலமாகத்தான் ரேபிஸ் தொற்று ஏற்படும். பூனை, குரங்கு, கழுதை போன்றவற்றை வெறி நாய் கடித்து, அவை மற்றவர்களைக் கடித்தாலும் அவர்களுக்கும் ரேபிஸ் வர வாய்ப்பு இருக்கிறது. அவ்வளவு ஏன்? ரேபிஸ் வந்த மனிதர் கடித்தால்கூட மற்றவர்களுக்கு ரேபிஸ் வந்துவிடும்'' என்கிறார் டாக்டர் ஆர்.ஸ்ரீனிவாசன்.
 
ரேபிஸ் அறிகுறி என்ன?
தமிழ்நாடு அரசு வன உயிரின மருத்துவ அலுவலர் என்.எஸ். மனோகரனைச் சந்தித்தோம்.
 
''நாய்க்கு வெறிநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?''
''நாய் வளர்ப்பவர்கள் உரிய தருணத்தில் வெறிநோய்த் தடுப்பூசியை நாய்க்குப் போடுவதன் மூலம் நாயையும் காப்பாற்றலாம். தங்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
30 நாள் குட்டியாக இருக்கும்போதே ஆன்டி ரேபிஸ் வாக்சின்  எனப்படும் தடுப்பூசியைப் போட வேண்டும். அடுத்த 30 நாட்கள் கழித்து பூஸ்டர் (ஙிஷீஷீstமீக்ஷீ) ஊசி போட வேண்டும். பின்னர் ஆண்டுக்கு ஒரு தடவை, நாயின் ஆயுள் உள்ள வரை ஆன்டி ரேபிஸ் வாக்சினைப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் நாய்க்கு நோ ரேபிஸ்!''
 
''நாய்க்கு ரேபிஸ் தொற்று இருக்கிறது என்று எப்படித் தெரிந்துகொள்வது?''
''ரேபிஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட நாய்க்கு மூன்று நிலைகள் உண்டு. முதல் நிலை மூன்று நாட்கள் வரை நீடிக்கும். இயல்புக்கு மீறிய பரபரப்புடன் நிலைகொள்ளாமல் சுற்றிக்கொண்டு இருக்கும். இரண்டாம் நிலை அபாயகரமானது. எஜமான் உட்பட அருகில் வரும் எவரையும் கடித்துக் குதறிவிடும். உயிர் இல்லாத கம்பி, மரம் போன்றவற்றையும் கடிக்கும். இது மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கும். மூன்றாவது நிலை முற்றிய நிலை. மூளை பாதிக்கப்பட்டு நரம்புகள் செயல் இழக்கும். பக்கவாதம் வரும். முகத்தின் தசைகள் பாதிக்கப்படுவதால் எச்சிலைக்கூட விழுங்க முடியாது. உமிழ்நீர் ஒழுகியபடி இருக்கும். எதையும் சாப்பிட முடியாது. மூச்சுத் திணறி ஒரு சில நாட்களில் நாய் இறந்துவிடும். இதைக் கண்டறியத்தான் கடித்த நாய் உயிரோடு இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள்.''
 
''ரேபிஸ் வந்த நாய்க்கு சிகிச்சை இருக்கிறதா?''
''இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலே சொன்ன அறிகுறிகள் மற்றும் கால்நடை மருத்துவரது பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில், ரேபிஸ் என்று முடிவாகிவிட்டால் இரண்டு வழிகள் இருக்கின்றன.
ஒன்று: நோயுற்ற நாயைத் தனிமைப்படுத்தி அது இறக்கும்வரை காத்திருக்கலாம். நான்கு, ஐந்து நாட்கள் மிகவும் துன்பப்பட்டு இறக்கும். இன்னொன்று: சட்டப்படி, உரிய முறையில் அதைக் கருணைக்கொலை செய்துவிடுவதுதான்.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக